நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வித்தியாசமான குரல் வளம் மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் அர்ஜுன் தாஸ். வில்லன் கதாபாத்திரங்களில் தொடங்கி கதாநாயகனாகவும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் தற்போது அவர் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஜான் டோ’.
இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். விறுவிறுப்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. கதையின் மையக் கதாபாத்திரமான சந்துரு என்ற வேடத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்.
சஞ்சனா நடராஜன் காவல்துறை அதிகாரியான ஏ.ராவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜாரா வினீத் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் ஷோபு யார்லகட்டா இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
கதையையும் திரைக்கதையையும் இயக்குநர் மதுமிதா, நிக்கோலஸ் செவாலியருடன் இணைந்து எழுதியுள்ளனர். முஜீப் மஜீத் இசையமைக்க, பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பையும், தினேஷ் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும் கவனித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாடலான ‘நான் போதுமா’ ஏற்கெனவே வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் கைப்பற்றியுள்ள நிலையில், திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
