‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரத்துடன் இரண்டு திரைப்படங்களில் இணைந்து பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களது முதல் படம் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையாக உருவாக உள்ளது.
கன்னடத் திரையுலகில் தனித்துவமான படைப்புகளால் கவனம் பெற்றவர் ரிஷப் ஷெட்டி. ‘காந்தாரா’ மற்றும் அதன் அடுத்த பாகத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் இயக்குநர் சிதம்பரம் தற்போது ரிஷப் ஷெட்டியுடன் இணைவது தென்னிந்தியத் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டணியில் உருவாகும் முதல் திரைப்படம் கன்னட மொழியில் தயாரிக்கப்படும் பிரம்மாண்ட விளையாட்டுத் திரைப்படமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
படத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கதையின் முழுமையான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரிஷப் ஷெட்டி, இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தப் படப்பிடிப்பை முடித்த பிறகு சிதம்பரத்தின் புதிய படத்தில் இணைய உள்ளார்.
தொடர்ந்து இரண்டு படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணியாற்ற இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
