பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அவர் உருவாக்கியிருந்த தீம் இசையை ஷாருக்கானுக்கு வழங்கியதாகவும், தற்போது சச்சின் – ஜிகர் இசைப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.
‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கானும் சித்தார்த் ஆனந்தும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தின் இசைக்கு அனிருத் மற்றும் சச்சின் – ஜிகர் இணைந்து பணியாற்றுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமண ஏற்பாடுகள் காரணமாக அனிருத் படத்திலிருந்து விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பினரும் சுமுகமாகப் பேசி இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அனிருத் ஏற்கெனவே உருவாக்கியிருந்த தீம் இசையை ஷாருக்கானுக்கு பரிசாக வழங்கியதாகவும், மீதமுள்ள இசைப் பணிகளை சச்சின் – ஜிகர் கவனிக்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் இந்தப் படம் டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
