திருமலை: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் மாதத்தில் பல்வேறு வைணவ உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. திருமலை நம்பி உற்சவம் நவம்பர் 2-ம் தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 11-ம் தேதி திருமலை நம்பி சாத்துமுறை நடைபெற உள்ளது.
மேலும், ஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவம் நவம்பர் 4-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உற்சவத்தில் வைணவ மரபுகளின்படி சிறப்பு வழிபாடுகள் மற்றும் சாத்துமுறை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
நவம்பர் 13-ம் தேதி நாகுல சவிதி நாளையொட்டி பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீவாரி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதே நாளில் மணவாள மாமுனிகள் சாத்துமுறையும் நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 15-ம் தேதி வருடாந்திர ஸ்ரீவாரி புஷ்பயாகத்திற்கான அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி வருடாந்திர புஷ்பயாகம் நடைபெறுகிறது.
புஷ்பயாகத்தின்போது ஏழுமலையான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு நடைபெறும் இந்த வழிபாடு திருமலையின் முக்கியமான உற்சவங்களில் ஒன்றாகும்.
நவம்பர் மாதத்தில் திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள் உற்சவ நாட்கள் மற்றும் தரிசன ஏற்பாடுகள் குறித்த விவரங்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
