தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 15) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. இதனைத் தரிசிப்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
கடந்த 10-ந்தேதி கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்களாக சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் மற்றும் பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பலரும் கோவில் வளாகம் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட பக்திப் பாடல்களைப் பாடி வழிபட்டு வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை கடற்கரையில் சூரபத்மனை முருகப்பெருமான் வேலால் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண்பதற்காக அதிகாலை முதலே கடற்கரைப் பகுதியில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் திருக்காட்சியின்போது எழுப்பப்படும் அரோகரா கோஷம் திருச்செந்தூரையே பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரசம்ஹாரம் நிறைவடைந்த பின்னர் நாளை 16-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள், மருத்துவக் குழுக்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பாகத் தரிசனம் செய்யக் கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
