நடிகை ஓவியா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘கிளிக்’ குறித்த அறிவிப்பு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை, காதல், நட்பு மற்றும் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
குறிப்பாக ஜென்-சி தலைமுறையினருடன் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராஜாபிரபு இப்படத்தைத் தயாரிப்பதுடன் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நடித்துள்ளார். இளமைத் துடிப்பு, நகைச்சுவை, காதல் மற்றும் சஸ்பென்ஸ் ஆகிய அம்சங்கள் ஒன்றிணைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இதனை உருவாக்கி வருகின்றனர்.
சுந்தர் மஹாஸ்ரீ இப்படத்தை இயக்குகிறார். ஓவியா, ராஜாபிரபு ஆகியோருடன் அஸ்மிதா, அமுதவாணன், லொள்ளு சபா மனோகர், சல்மா பைரோஸ், அருள் செல்வம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு அருண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோசப் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தின் தொழில்நுட்பப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.
இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமகால இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ற கதைகளைத் தேர்வு செய்வதில் தமிழ் சினிமா அதிக கவனம் செலுத்தி வரும் சூழலில், ‘கிளிக்’ திரைப்படமும் அந்த வரிசையில் ரசிகர்களைக் கவருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
