நடிகை பிரியங்கா சோப்ரா, இயக்குநராக அறிமுகமாகும் ஸ்வரூப்ராஜ் மேதாராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் இயக்கியுள்ள ‘நன்ஹே தில்’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் காணொளியைப் பகிர்ந்துள்ளார். இதனால் படத்தின் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் சுனில் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குழந்தைகள், அவர்களது உணர்வுகள், கருணை மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தின் அவசியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முன்னோட்டமும் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
நடன இயக்குநராகவும் மேடை நிகழ்ச்சிகளின் கலை இயக்குநராகவும் நீண்டகால அனுபவம் பெற்றவர் ஸ்வரூப்ராஜ் மேதாரா. 500-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ள அவர், பல்வேறு விருது விழாக்களிலும் தனது நடன இயக்கத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது திரைப்பட இயக்குநராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்தப் படம் சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது. டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ராவின் வாழ்த்து படக்குழுவுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ள நிலையில், நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் இப்படம் ரசிகர்களிடம் எத்தகைய வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
