ஸ்காட்லாந்தில் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எடின்பர்க் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்தப் பேரணியில் 6,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
எடின்பர்க் நகரின் ராயல் மைல் பகுதியில் திரண்ட மக்கள், அங்கிருந்து ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். இந்தப் போராட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வறுமை ஒழிப்பு அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் இயக்கங்கள் என 80-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஸ்காட்லாந்தின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஏஐ தரவு மையத் திட்டங்கள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால் மின்சாரத் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும், இதனால் பொதுமக்களுக்கான மின் கட்டணங்கள் உயரக்கூடும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், தரவு மையங்களுக்குத் தேவையான குளிரூட்டும் வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் இயற்கை வளங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
இந்தத் திட்டங்கள் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்பட்டால் 2030-ம் ஆண்டுக்குள் ஸ்காட்லாந்தில் அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் துறைகளில் ஒன்றாக தரவு மையங்கள் மாறக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்த வேண்டும் என்றும், உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
