தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் நடைபெற்ற இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இரு சம்பவங்களும் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளதால், அவற்றுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் சம்பவம் பீட்டர்மரிட்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள ஸ்வீட்வாட்டர்ஸ் பகுதியில் நடைபெற்றுள்ளது. அங்கு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் ஒரு வாகனத்துக்குள் எட்டு பேர் உயிரிழந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்களையும், தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மற்றொரு சம்பவம் தென்னாப்பிரிக்க தலைநகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஜெஃப்ஸ்வில் குடியிருப்புப் பகுதியில் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் ஒன்பது பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இரு சம்பவங்களுக்கும் இடையே சுமார் 530 கிலோமீட்டர் தொலைவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது இன்னும் உறுதியாகவில்லை. அப்பகுதிகளில் கடந்த காலங்களிலும் கும்பல் மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், குற்றக் கும்பல்களின் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
