பிரான்ஸ் நாட்டின் தேசிய தபால் நிறுவனத்துடன் தொடர்புடைய டிஜிட்டல் சேவை நிறுவனமான மெய்லேவா மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 2.2 கோடி பேரின் தனிப்பட்ட அடையாளத் தகவல்கள் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் பாதுகாப்பு தொடர்பாக பிரான்ஸ் அரசு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
மெய்லேவா நிறுவனம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் சார்பில் கடிதங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் அனுப்பும் சேவையை வழங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இந்த நிறுவனத்தின் கணினி அமைப்புகள் மீது சிக்கலான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக லா போஸ்ட் குழுமம் தெரிவித்துள்ளது. தாக்குதல் கண்டறியப்பட்டதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், குடும்பப் பெயர் மற்றும் அஞ்சல் முகவரி போன்ற அடையாளத் தகவல்கள் கசிந்துள்ளதாக நிறுவனம் விளக்கியுள்ளது. ஆவணங்களில் இடம்பெற்றிருந்த தகவல்களின் முழு உள்ளடக்கம் மெய்லேவா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தொடர்புகளைச் சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நீதித்துறை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளதால், மோசடி அழைப்புகள், போலி குறுஞ்செய்திகள் மற்றும் அடையாளத் திருட்டு போன்ற அபாயங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
