நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய திரைப்படமான ‘டேர் டெவில்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய வில்லனாக நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் தொடர்பான அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் – சிவராஜ்குமார் மோதலை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
படத்தின் பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, சிவராஜ்குமார் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்காக வலுவான எதிர்மறை கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நேரடியாக சிவராஜ்குமாரைச் சந்தித்து கதையை விவரித்துள்ளார். கதையைக் கேட்டதும் அவர் நேர்மறையாகப் பதிலளித்ததாகவும், பின்னர் அஜித்தும் அவரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பில் நவம்பர் 17 அல்லது 18-ம் தேதி முதல் சிவராஜ்குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் சிவராஜ்குமார். தற்போது அஜித்துக்கு எதிராக அவர் நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இரு நட்சத்திரங்களின் திரை மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
