தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத் ரவிச்சந்தர், இசையமைப்புப் பணிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தொடர்ந்து இசைப் பணிகளில் ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக அறிமுகமானது முதல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்றவர் அனிருத். குறிப்பாக இளைஞர்களைக் கவரும் பாடல்கள், பின்னணி இசை மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
திரையுலகில் தனது பயணத்தின் 15 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ள நிலையில், ஓய்வு எடுக்கப்போவதாக வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே பேசுபொருளாகின. இதுகுறித்து விளக்கம் அளித்த அனிருத், தனது வாழ்க்கையில் இதுவரை ஒரு நாள்கூட முழுமையாக ஓய்வு எடுத்ததில்லை என்றும், இப்போதும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இசைப் பயணத்தில் இன்னும் பல முக்கியமான சாதனைகள் காத்திருப்பதாகவும், வருங்காலத்தில் ரசிகர்களுக்கு சிறந்த இசையை வழங்குவதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அனிருத் இசையமைப்பில் இருந்து விலகுகிறார் என்ற வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன.
