சென்னை: பழங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டும் உயர்த்துவதில்லை. உங்கள் முக பொலிவையும் உயர்த்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் தங்களது முக அழகுக்கு தர்பூசணி, ஆப்பிள், தக்காளி, பப்பாளி போன்ற பழங்களை பயன்படுத்தலாம். பழங்களில் உள்ள ஆரோக்கிய பலன்கள் சருமத்திற்கு ஊட்டம் அளித்து மெருகேற்றும்.
தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. அதே நேரத்தில் அழகை தந்து, இளமையை தக்க வைக்கவும், சருமத்தின் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தரவும் தர்பூசணி உதவுகிறது. ஒரு துண்டு தர்பூசணி பழத்தை எடுத்து அதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக பூசி கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து இளஞ்சுடுநீரில் கழுவி விடுங்கள். பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவும்போது, சருமம் பொலிவு பெறும்.
நீங்கள் வறண்ட சருமத்தை கொண்டவர்கள் என்றால், பப்பாளிப்பழத்தை அதிகமாக பயன்படுத்துங்கள். பப்பாளியில் இருக்கும் என்சைம்கள் சருமத்தின் ஈரத்தன்மையை நிலைநிறுத்தும். சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும். மாநிறம் உடையவர்கள் தங்கள் நிறத்தை மேம்படுத்த, இரண்டு துண்டு பப்பாளியை எடுத்து இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன் கலந்து, அதில் தயிரும் சேர்த்து கிரீம் போல் ஆக்கி, உடலில் பூசி, 35 நிமிடங்கள் களைத்து கழுவுங்கள். தொடர்ந்து இதை பூசிவந்தால், நல்ல நிற மாற்றம் ஏற்படும்.
ஆப்பிளை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி, சிறிதளவு தேனில் கலந்து சருமத்தில் பூசி 25 நிமிடங்கள் வைத்திருங்கள். பின்னர் கழுவுங்கள். இது சருமத்தில் ஏற்படும் பலவிதமான பாதிப்புகளை போக்கும். நேந்திரம் பழத்தையும், ஆப்பிளையும் சம அளவில் எடுத்து அதனுடன் சிறிதளவு பால் ஆடை கலந்து பேக் ஆக முகத்தில் பூசி அரை மணிநேரம் கழிந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படியாக வாரத்தில் இரண்டு முறை செய்தால் சருமம் பொலிவு பெறும்.
தக்காளி சாறும், எலுமிச்சை சாறும் சம அளவில் எடுத்து இரண்டும் கலந்து முகம் மற்றும் கை கால்களில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்னால் இதை செய்வது நல்லது. தயிர், தக்காளி சாறு, மஞ்சள் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நிறம் மேம்படும். தக்காளிப்பழத்துடன் சிறிதளவு நெல்லிக்காய் சாறு கலந்து தேய்த்தால் சரும சுருக்கங்களை போக்கலாம்.