சென்னை: அசைவம் என்றால் வெளுத்து வாங்குபவர்கள் உள்ளனர். அவர்களுக்காக இது ஸ்பெஷல். சிக்கன் என்றால் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதையே மஞ்சூரியன் சிக்கன் என்றால்… எப்படி சமைப்பது என்று பார்ப்போமா!
ஓட்டலில் செய்வது போலவே வீட்டிலும் எளிதாக சிக்கன் மஞ்சூரியன் எப்படி செய்யலாம்! இதே அதற்கான ரெஸிபியை பார்ப்போமா!
எலும்பு நீக்கிய கோழிக்கறி – 400 கிராம், முட்டை – 1, கார்ன்ப்ளவர் – 6 மேசைக்கரண்டி, மைதா – 1 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி, இஞ்சி விழுது – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு – கால் கப், குடை மிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 3, வெங்காயத்தாள் – 2, எண்ணெய் – 4 மேசைக்கரண்டி, வினிகர் – 2 மேசைக்கரண்டி.
செய்முறை: கோழிக்கறியை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
பின்னர் இந்த கலவையில் சிக்கனை சேர்ந்து நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டுங்களைப் போட்டு மூன்று, நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், குடை மிளகாயை நீள வாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். அப்படியே வெங்காயத் தாளினையும் நறுக்கி வைத்துக் கொண்டு மீதமுள்ள கார்ன் ப்ளவரை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் சோயா சாஸ்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலந்து வேகவிட வேண்டும்.
அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். பின்னர் நறுக்கின குடை மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம். சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி. எளிதாக செய்யலாம். வீட்டில் செய்து கொடுத்து அனைவரையும் அசத்துங்க.