அத்திப்பழத்தின் இனிப்பு சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், பல நூற்றாண்டுகளாக மக்கள் அத்திப்பழங்களை சாப்பிட்டு வருகின்றனர். அத்திப்பழம் நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், எலும்புகளை வலுப்படுத்தவும், பல நோய்களை எதிர்த்துப் போராடவும் மிகவும் உதவியாக இருக்கிறது. அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்த அத்திப்பழம் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
அதேபோல, அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன, மேலும் அவற்றை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் முழுதாக உணரவைக்கும், சிற்றுண்டி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
அத்திப்பழம் சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. அத்திப்பழத்தின் நன்மைகள் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் அத்திப்பழத்தின் தீமைகள் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்திப்பழத்தை அதன் நன்மைகளுக்காக அதிகமாக சாப்பிடுவது அல்லது சில பிரச்சனைகள் உள்ளவர்கள் அவற்றை எடுத்துக்கொள்வது மோசமான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிலருக்கு அத்திப்பழம் ஒவ்வாமையாக இருக்கலாம்.
அத்திப்பழத்தில் காணப்படும் சில இயற்கை இரசாயன கலவைகள் காரணமாக, சிலருக்கு அவற்றை சாப்பிட்ட பிறகு ஒவ்வாமை ஏற்படலாம். இந்த பழத்திற்கு ஒவ்வாமையின் அறிகுறிகள் சொறி, வீக்கம், அரிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும். மேலும், அத்திப்பழத்தில் இயற்கையான சர்க்கரைகள் அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழத்தை அளவோடு உட்கொண்டு, மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். மேலும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே அத்திப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் என்று முன்பே சொன்னோம் அல்லவா?! எனவே, அத்திப்பழத்தை அதிகமாக உட்கொள்வது வாயு மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு அத்திப்பழங்களை எடுத்துக்கொள்வது வயிற்று இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். எனவே அறுவை சிகிச்சைக்குப் பிறகு அத்திப்பழத்தை சாப்பிடலாமா வேண்டாமா என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.