தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராணவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் நேற்று வந்தார்.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் திரண்டிருந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சிற்றம்பலம் புராணவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலை, 20 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு, மும்பை வழியாக கடத்தப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டது.
அருங்காட்சியகம் சிலையை காட்சிக்கு வைத்து தினமும் சம்பாதிக்கிறது. தற்போது, அருங்காட்சியகம் சிலையை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ரூ.10 கோடி மதிப்பிலான சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலையை 3 மாதங்களுக்குள் மீட்டு இக்கோயிலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கிராம மக்களின் ஆதரவுடன் சிலையை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.