சென்னை: போக்குவரத்து கழக பணிமனைகளில் தரமான உணவு வழங்க வேண்டும் என போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலர் எம்.கனகராஜ் கூறியிருப்பதாவது:-
விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் பணிமனை உணவகங்களில் தரமான உணவு வழங்கக் கோரி பல்வேறு நினைவூட்டல் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தஞ்சாவூர் பணிமனையில் மிகவும் மோசமான முறையில் உணவு வழங்கப்படுகிறது. அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டுள்ளன.
ஏலம் எடுத்தவர் உணவகத்தை நடத்தாமல், உள் ஏலத்தை வேறு நபர் நடத்த விடுவதும் பிரச்னையாக உள்ளது. பணிமனை உணவகத்தில் உணவு தயாரிக்கப்படாமல், தரமற்ற உணவுகளை பிற இடங்களில் இருந்து கொண்டு வந்து விட்டுச் செல்லும் நிலை உள்ளது.
ஒரு நாகரிக சமுதாயத்தில் நிர்வாகம் இத்தகைய நடைமுறைகளை அனுமதிக்கக் கூடாது.
தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து பட்டறைகளிலும் அரிசி உள்ளிட்ட தரமான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கவும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.