நன்னிலம்: துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரத் தலமாக பக்தர்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்று விளங்குகிறது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மதுவனேஸ்வரர் கோவில்.
பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 71-வது தலமாக இருப்பது நன்னிலம். தேவர்களால் உருவாக்கப்பட்ட தேவ தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபடுவோர், தங்களுடைய துன்பங்களில் இருந்து விடுபட்டு இன்பமாக வாழ்வார்கள். மேலும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபடுவோர் எல்லா செல்வங்களும் பெற்று இனிது வாழ்வர் என்று தலபுராணம் கூறுகிறது. இத்தலத்துக்கு சுந்தரர் எழுதிய பதிகம் ஒன்று உள்ளது.
இத்தலத்து இறைவன் மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி மதுவனநாயகி, பிரஹதீஸ்வரி என்ற திருப்பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரணமாக, யானை ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. நன்னிலம் மதுவனேஸ்வரர் கோவிலும் அத்தகைய ஒரு மாடக் கோவில்தான்.
முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோவில், 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்டது. கோவிலின் ராஜகோபுரம் 2 நிலைகளைக் கொண்டது. நேர் எதிரில் பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. நன்னிலத்து துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறார்.
மூலவர் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. படிகளேறி மேலே செல்ல வேண்டும். கட்டுமலை மீதுள்ள பிராகாரத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாக உள்ளது. மூலவர் மதுவனேஸ்வரர், சதுர ஆவுடையார் மீது சற்றுயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. விசேஷ காலங்களில் குவளை, நாகாபரணம் சார்த்தப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவக்கிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ரகுப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால், இத்தலம் மதுவனம் என்று பெயர் பெற்றது. சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோவிலை பெருங்கோயில் என்று அடைமொழி கொடுத்து சிறப்பித்துப் பாடியுள்ளார். தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது எனபதையும் குறிப்பிட்டுள்ளார்.
பிருஹத்ராஜனின் கோரிக்கைக்கு இணங்கி, சிவபெருமான் ஆலயத்தின் வடக்கே தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினாராம். இது சூலதீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மது தீர்த்தம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
கும்பகோணம் – நாகூர் சாலை மார்க்கத்தில் நன்னிலம் உள்ளது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் இருந்தும் நன்னிலம் வரலாம். நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில், அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.