சென்னை: உச்ச நீதிமன்ற நிபந்தனைகளின்படி செந்தில் பாலாஜி இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது. இந்த வழக்கை அமலாக்கத்துறை தாமதப்படுத்தியதால் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.
பின்னர், உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து, புழல் சிறையில் கடந்த 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று இரவு ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போது திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, செந்தில் பாலாஜி இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.