சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை (செப்டம்பர் 30) முதல் சேவைத்துறையினர் சாலை வெட்ட தடை விதித்து மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகரில் மாநகராட்சி புதிய சாலைகள் அமைத்த சில மாதங்களிலேயே மின்வாரியத் துறை, சென்னை குடிநீர் வாரியம், பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலைத்தொடர்புத் துறைகள் உள்ளிட்ட சேவைத் துறையினர் சாலைகளை வெட்டி, துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சில சமயங்களில் ஒப்பந்ததாரர்களின் இடையூறு காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, பள்ளம் தோண்டப்பட்டு சாலை அப்படியே கிடக்கிறது. மழைக்காலத்தில் இதில் தவறி விழும் சம்பவங்களும் நடக்கின்றன.
எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், இதுபோன்று சாலைகளை வெட்ட நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள சாலைகள் மற்றும் உள் சாலைகளில் பல்வேறு சேவைத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டும் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 30 முதல் அடுத்த உத்தரவு வரை உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மின்துறை, சென்னை குடிநீர் வாரியம், தொலைத்தொடர்பு துறை போன்றவற்றுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நேரங்களில் அவசர தேவைகளுக்கு மட்டும் ரோடு வெட்டும் பணிகளை மேற்கொள்ள கமிஷனரின் ஒப்புதலுக்கு பின் துணை கமிஷனர் (பணிகள்) மற்றும் மண்டல துணை கமிஷனர்கள் (வடக்கு, மத்திய, தெற்கு) மூலம் அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.