சென்னை: அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குகளை பராமரிப்பது தொடர்பான தொடக்கக் கல்வித் துறையின் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், 31,336 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நிதி ஒதுக்கீடு செலவுகளை மேற்கொள்வதற்காக பள்ளிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பராமரித்து வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில், நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க வங்கிக் கணக்குகளை பராமரிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு தனி வங்கிக் கணக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், பொது பள்ளி பயன்பாட்டிற்காக தனி வங்கி கணக்கு பராமரிக்க வேண்டும்.
இந்த இரண்டு வங்கிக் கணக்குகள் தவிர, ஏதேனும் இருந்தால், அவற்றை மூடிவிட்டு, அதிலுள்ள நிதியை, பள்ளியின் பொது வங்கிக் கணக்கில் வரவு வைத்து, பராமரிக்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.