சென்னை: தமிழகத்தில் நடந்ததாக கூறப்படும் மணல் குவாரி முறைகேட்டில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி புலனாய்வு குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மணல் விற்பனை செய்யப்பட்டு, பல கோடி ரூபாய் வருமானம், முறைகேடாக பணப் பரிவர்த்தனை நடப்பதாகவும், பல கோடி வரி ஏய்ப்பு நடப்பதாகவும், அமலாக்கத் துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு பொறுப்புகளில் உள்ள ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரை அழைத்துப் பேசினர்.
இறுதியில், முறைகேடுகள் நடந்திருப்பதும், சில ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதும், போலி பில் மூலம் மணல் விற்பனை செய்வதால் ஜிஎஸ்டிக்கு வரி இழப்பு ஏற்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் ரூ.36.45 கோடி வருவாய் கணக்கு புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.4,730 கோடிக்கு மணல் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மணல் அள்ளும் முறைகேடு தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதால், வருமான வரித்துறையும், ஜி.எஸ்.டி. விசாரணைக் குழுவுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.
இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.