திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று அங்குரார்ப்பணம் எனும் முளைப்பாரி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வசேனாதிபதி சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வருகிறார். முதல் நாளான நாளை மாலை 3 மணிக்கு கருடன் உருவம் பொறித்த பிரம்மோற்சவ கொடியுடன், விஸ்வசேனாதிபதி, சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வாகனங்களுடன் வீதியுலா பவனி வந்து மாடவீதிக்கு வருகிறது.
பின்னர் மாலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் தங்கக் கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படும். அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் வழங்க உள்ளார்.
இதையடுத்து பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையாக மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
2-ம் நாள் (5-ம் தேதி) காலை சிறிய சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 3-ம் நாள் (6-ம் தேதி) காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 4-ம் நாள். (7-ம் தேதி) ) காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வபூபால வாகனத்திலும் நான்கு மாட மலையப்ப சுவாமி பவனி நடைபெறும். 5-ம் நாள் (8-ம் தேதி) காலை மோகினி அலங்காரத்தில் சுவாமி, தனிப் பல்லக்கில் கிருஷ்ணர் தொடர்ந்து பவனி வந்து அருள்பாலிக்கிறார்.
அன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருடசேவ உற்சவம் நடைபெறும். 6-ம் நாள் (9-ம் தேதி) காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு யானை வாகனத்திலும் பவனி நடக்கிறது.
7-ம் நாள் (10-ம் தேதி) காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 8-ம் நாள் (11-ம் தேதி) காலை மகா ரதம் எனப்படும் தேரும் நடக்கிறது. அன்று இரவு குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவம் நடைபெறும். 9-ம் நாள் (12-ம் தேதி) காலை புஷ்கரணியில் (குளம்) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி, திருமலை வண்ண விளக்குகளாலும், மணம் வீசும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி – திருமலை இடையே சிறப்பு பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.