திருப்பதி: முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், கடவுளை அரசியலுக்கு இழுக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து ஆந்திர அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கலப்பட நெய் வழக்கை விசாரிக்க சிபிஐ இயக்குநர் மேற்பார்வையில் 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ மற்றும் ஆந்திரா காவல்துறையில் இருந்து தலா இரண்டு அதிகாரிகளும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் எஸ்ஐடியில் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“இந்த விவகாரத்தில் இரு தரப்பினரின் பரஸ்பர புகார்களுக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடுகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.