திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், திருவனந்தபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தினமும், ஆன்லைனில் முன்பதிவு செய்யும், 80,000 பக்தர்கள் மட்டுமே, மண்டல் காலத்தில் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என, முடிவு செய்யப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைகள் நவ., 16-ல் துவங்குகிறது. இதை முன்னிட்டு, 15-ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் மண்டல் மற்றும் மகரவிளக்கு சீசனில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதிகரித்தும், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தவறியதாலும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
எனவே, பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தினசரி ஆன்லைன் முன்பதிவுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் உடனடி முன்பதிவு கவுன்டர்கள் தேவையில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேற்றைய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் மண்டல சீசனில், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 80,000 ஆக கட்டுப்படுத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது பக்தர்கள் வழியையும் தேர்வு செய்யலாம். இதன் மூலம் பக்தர்கள் நெரிசல் குறைந்த பாதையில் செல்ல முடியும்.
வனப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். அதிக நாள்களில் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பக்தர்களுக்கு உரிய இடங்களை தேர்வு செய்து கூடுதல் வசதிகள் செய்து தரப்படும்.
நிலக்கல், எருமேலியில் கூடுதல் வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.