சென்னை: சென்னை ரங்கநாதன் தெருவின் நடுவில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள். வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் விடுமுறை நாட்களில் தி.நகரில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூடுவார்கள்.
ஆயுத பூஜையையொட்டி 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் கடந்த 3 நாட்களாக ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இன்னும் 2 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே இடையில் இருப்பதால் அடுத்த 2 வாரங்களும் வார இறுதி நாட்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு ரங்கநாதன் தெருவின் நடுவில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் ரகசிய கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் கள்.
பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அடங்கிய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ள போலீசார் அவர்கள் கூட்டத்துக்குள் ஊடுருவினால் கண்டுபிடித்து கொடுக்கும் வசதியையும் ஏற்படுத்தி அதன் மூலமாக கண்காணிக்கிறார்கள்