செங்கம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் தானா புயல் காரணமாக தொடர் கனமழை காரணமாக தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், ஆறுகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இரு கரைகளையும் தொட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற சென்னியம்மன் கோயில் உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் சென்னியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அங்கு எச்சரிக்கை பேனர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் நீராடவும், சென்னியம்மன் கோயிலில் வழிபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என எச்சரிக்கை பேனரையும் வைத்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.