குன்னூர்: நீலகிரி மாவட்டத்திற்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் 184 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சென்ற ரயிலை ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தினர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்டவாளத்தை சரி செய்தனர்.
அதன்பின், மலை ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டது. காலை 10.05 மணிக்கு வர வேண்டிய மலை ரயில் 11.08 மணிக்கு குன்னூர் ரயில் நிலையம் வந்தது.