ஈரோடு: தென்னிந்தியாவில் ஜவுளி விற்பனைக்கு பெயர் பெற்ற நகரம் ஈரோடு. இங்கு வாரந்தோறும் நடைபெறும் ஜவுளி சந்தையில் அனைத்து வகையான ஜவுளிகளும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், ஈரோடு ஜவுளி சந்தையில், வாரந்தோறும், ஏராளமான வியாபாரிகள், ஜவுளி கொள்முதல் செய்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் கடந்த ஒரு மாதமாக ஜவுளி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஈரோட்டில் செயல்படும் பெரும்பாலான ஜவுளிக்கடைகளில், தீபாவளிக்கு மறுநாள் இன்று ‘ஸ்டாக் கிளியரன்ஸ்’ என்ற பெயரில், 50 சதவீதம் வரை தள்ளுபடியில் ஜவுளி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்படி ஜவுளிக்கடைகள் நிறைந்த ஆர்கேவி சாலை உள்ளிட்ட கடை வீதிகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர்.
ஜவுளி கடைகள் அதிகாலை 4 மணி முதல் திறக்கப்பட்டு தள்ளுபடி விலையில் ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டன. தீபாவளிக்கு மறுநாளான இன்று காலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படுவதால் ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கடைகளில் குவிந்து ஜவுளிகளை வாங்கிச் சென்றனர்.
புதிய ஜவுளிகளை தள்ளுபடி விலையில் விற்கும் இந்த நடைமுறையை வாடிக்கையாளர்கள் வரவேற்றுள்ளனர். இதேபோல், ஜவுளி கடை உரிமையாளர்கள் கூறியதாவது:- தீபாவளி விற்பனைக்கு கொள்முதல் செய்யப்படும் ஜவுளிகளை முழுமையாக விற்பனை செய்யும் வகையில், குறைந்த விலையில் ஜவுளி விற்பனை செய்வதாகவும், 40 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்து வருகிறது.