சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை மக்கள் நலப்பணிகளுடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவ.7-ம் தேதி பிறந்தநாள் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பல்வேறு நலப்பணிகளுடன் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் அனைத்து மாநில, மண்டல, மாவட்டம், நகரம், ஒன்றியம், வட்டம், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் கலந்து கொள்கின்றனர்.
அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடி ஏற்றி, மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டும், விமரிசையாகவும் மணிமா தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட உள்ளனர்.”