சென்னை: புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோயிலுக்கு 2008-ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இக்கோயிலில் ரூ.4.82 கோடியில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 2,265 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வரும் 11 மற்றும் 14-ம் தேதிகளில் சுமார் 60 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும். கோயில் திருப்பணிகளுக்காக அருளாளர்கள் இதுவரை ரூ. 1,103 கோடி வழங்கப்பட்டுள்ளது.
1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களை மீட்டு பாதுகாக்கும் வகையில், 274 பழமையான கோவில்கள், 426.62 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 37 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மேலும், 10,460 கோவில்களுக்கு மண்டல மற்றும் மாநில அளவிலான நிபுணர் குழுக்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.5,847 கோடி மதிப்பில் 20,806 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 9,183 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.6,847 கோடி மதிப்புள்ள கோயில்களுக்குச் சொந்தமான 7,115.56 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, 1,75,995 ஏக்கர் அளந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. சிலை திருட்டை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போனால் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் கியூஆர் லைன் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம், சிலை தடுப்புப் பிரிவு காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து சிலையை கண்டுபிடித்து மீட்க புதிய தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் 6 மாதங்களில் முடிக்கப்படும். அதேபோல் மீட்கப்பட்ட சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது பற்றிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அதே கோவிலில் சிலைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.