திருவனந்தபுரம்: சபரிமலையில் ரோப் கார் அமைப்பது கேரள அரசின் நீண்ட கால திட்டமாகும். பம்பையில் இருந்து சபரிமலைக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதும், ஆபத்துக் காலங்களில் பக்தர்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
கலந்தாய்வு 2011-ல் துவங்கியது. இத்திட்டத்திற்கான முதல் ஆய்வு, 2019-ல் துவங்கியது. ஆனால், சபரிமலை பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், இதற்கு வனத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரோப்கார் திட்டத்தால் பெரும் வன இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதனால் அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது.
ஆனால், ரோப் கார் அமைக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்ததால், எப்படியும் இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. இரண்டாம் கட்ட ஆய்வில், ரோப் கார் டவர்களின் உயரத்தை அதிகரிப்பதன் மூலம், குறைவான வனப்பகுதியே தேவைப்படும் என்று பரிந்துரைத்தது. இதற்கு தேவையான வனப்பகுதிக்கு பதிலாக வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு வனத்துறை சம்மதம் தெரிவித்தது. இத்திட்டத்திற்கு 4.5336 ஹெக்டேர் வனப்பகுதி தேவைப்படும். அதே பகுதிக்கு வருவாய்த்துறை நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கொல்லத்தில் உள்ள 4.5336 ஹெக்டேர் வருவாய் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்து கேரள அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இன்னும் சில வாரங்களில் ரோப்கார் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.150 கோடி.