பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டிகே சிவகுமாரையும் காங்கிரஸ் கட்சி நியமித்தது.
அப்போது, முதல்வர், துணை முதல்வர் பதவி கிடைக்காததால், சில மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில், ஒக்கலிகாவை சேர்ந்த டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது போல், லிங்காயத் மற்றும் பழங்குடியினருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோஷம் வலுத்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், “கடந்த 2013-ல், நான் காங்கிரஸ் மாநில தலைவராக இருந்தபோது, தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
2018-ல், எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 2023-ல், என்னை துணை முதல்வராகக் கேட்டபோது, கட்சி மேலிடம் மறுத்து விட்டது. ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமான எஸ்சி, எஸ்டி, லிங்காயத் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கு பெரிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு பட்டியல் சாதியினரின் ஆதரவே முக்கியக் காரணம்.
எனவே, அந்த பிரிவினருக்கே துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்,” என்றார். அதேபோல், துணை முதல்வர் பதவிக்கு ஜாதிவாரி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணாவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சிறுபான்மையினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் வலியுறுத்தினார். இதுதவிர மூத்த அமைச்சர்கள் சிலர் துணை முதல்வர் பதவி கேட்டு காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.