புதுடில்லி: நைஜீரிய அதிபருடன் சந்திப்பு… மூன்று நாடுகள் பயணமாக நைஜீரியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நைஜீரிய அதிபர் டினுபுவை சந்தித்து பேசினார்.
இந்தியா மற்றும் நைஜீரியா இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு பின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது பெரிய விருதான “நைஜரின் கிராண்ட் கமாண்டர் ஆஃப் ஆர்டர்”-ஐ வழங்கி நைஜீரியா கௌரவித்தது. விருது பெற்றது குறித்து பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
இது பற்றி பேசிய அவர், “நைஜீரியாவின் தேசிய மரியாதையை எனக்கு வழங்குவதற்கான உங்கள் முடிவிற்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெருமை என்னுடையது மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் உரியது. இது பல நூற்றாண்டுகள் பழமையான இந்தியா-நைஜீரியா உறவுகளுக்கு கிடைத்த மரியாதை. இந்த மரியாதைக்காக, நைஜீரியா, உங்கள் அரசு மற்றும் குடிமக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.