சென்னை: பிரியாணியை விரும்பாத ஆட்கள் இருக்க முடியுமா. சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி. ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள். இன்று ட்ரை ஃப்ரூட் பிரியாணி செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை
பாசுமதி அரிசி, பால் – தலா ஒரு கப்
திராட்சை – ஒரு டீஸ்பூன்
கிராம்பு – 2
கீறிய பச்சை மிளகாய், ஏலக்காய் – தலா 1
பட்டை – ஒரு துண்டு
நெய், உப்பு – தேவையான அளவு.
அரைக்க: கசகசா – ஒரு டீஸ்பூன், பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 5.
செய்முறை: வெந்நீரில் கசகசாவை ஊற வைக்கவும். ஊறியவுடன், தண்ணீரை வடிகட்டி பாதம், முந்திரி, பிஸ்தா சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
செய்முறை: அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். திராட்சை சேர்த்து அது பொரிந்தவுடன், ஊறிய அரிசியைப் போட்டு உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அதனுடன் பாலையும் அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாகக் கலந்து, தேவையெனில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து, ஆவி போனதும் திறந்து பரிமாறவும். அருமையான சுவையில் ட்ரை ப்ரூட் பிரியாணி ரெடி. வாசனையே ஊரை கூட்டி விடும்.
குறிப்பு: ஒரு கப் அரிசிக்கு, ஒண்ணேகால் கப் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டும். மசாலாவில் தண்ணீர் அதிகமானால், நாம் சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவைக் குறைக்கலாம். ஊற வைத்த அரிசியை நெய்யில் வறுத்துப் போட்டால் சாதம் குழையாது. அதேபோல அரிசியை பலமுறை கழுவினால், பாசுமதிக்கேயுரிய வாசனை போய் விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்