அகமதாபாத்: இந்த ஆண்டு நடந்த நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வினாத்தாள் கசிவு, முறைகேடு, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
பீகார் பாட்னாவைச் சேர்ந்த மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோரை கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். நீட் தேர்வுக்கு முந்தைய நாளே மாணவர்களுக்கு பாதுகாப்பான இடம் அமைத்து வினாத்தாள்கள் மற்றும் விடைகளை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ இதுவரை 6 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளி என்ற இடத்தில் இருந்து வினாத்தாள் கசிந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பள்ளியின் முதல்வர் எசனுல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர்களில் ஹசாரிபாக் மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளராக இசானுல் ஹக் பணியாற்றியவர். இம்தியாஸ் ஆலம் ஒயாசிஸ் பள்ளி தேர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், தேசிய தேர்வு முகமையின் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் சட்டவிரோதமாக உதவியதாக பத்திரிகையாளர் ஜமாலுதீன் என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவர் பிரபாத் கபர் என்ற ஹிந்தி நாளிதழில் பணியாற்றி வந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர வினாத்தாள் கசிவு தொடர்பாக ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஆனந்த், கெடா, அகமதாபாத் மற்றும் கோத்ரா ஆகிய 4 மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ராஜஸ்தானில் உள்ள ஜலவார் மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் மாணவர்கள் சிலர் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து டெல்லி மற்றும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் மருத்துவ கல்லூரிக்கு சென்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் 10 மாணவர்கள் பிடிபட்டனர். இதனை கல்லூரி டீன் சுபாஷ் சந்திர ஜெயின் உறுதி செய்தார்.
இந்த மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.