சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பூமத்திய ரேகையை ஒட்டி கிழக்கு இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தின் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூரில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு. வரும் 27-ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. வரும் 28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊட்டி, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.