டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில் இறந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 12 மணிக்கு கூடிய பிறகும் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை எழுப்பின. அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பல் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும், வழக்கமான நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா நேற்று கூடியபோது, அதானி விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எழுப்பினார். ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தங்கரை பேச எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதிக்காததால், அவையில் அமளி ஏற்பட்டது. “மன்றத்தின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே தனது கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும்” என்று ஜெகதீப் தங்கர் அறிவுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த கார்கே, “நான் 54 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். உங்கள் அறிவுரை எனக்குத் தேவையில்லை. நான் உங்களுக்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் அளித்து வருகிறேன். ஆனால், நீங்கள் எதிர்மறையாகப் பேசி வருகிறீர்கள்” என்றார். எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும், அதானி விவகாரம், சம்பல் கலவரம், மணிப்பூர் பிரச்னை ஆகியவற்றைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர் அமளியால் ராஜ்யசபாவும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:- 2024-ம் ஆண்டு முடிய உள்ளது. 2025-ம் ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்க காத்திருக்கிறோம். 75-வது அரசியலமைப்பு தின விழாவை தொடங்க உள்ளோம். பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். இங்கு ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைக்க வேண்டும். சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையில் பொறுப்புடன் செயல்படுகின்றனர்.
இரு அவைகளும் சுமூகமாக செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் பாராளுமன்றத்தை முடக்க முயற்சிக்கின்றனர். சுமார் 90 முறை மக்களால் நிராகரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை. மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதில்லை. அவர்களின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நேரம் வரும்போது, அவர்களைத் தண்டித்து நிராகரிக்கிறார்கள்.
புதிய யோசனைகளுடன் நாடாளுமன்றத்தில் பேச புதிய எம்.பி.க்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் சிலர் பேசவிடாமல் தடுக்கின்றனர். இது வருத்தமாக இருக்கிறது. புதிய எம்.பி.க்களுக்கு அனைத்து கட்சிகளிலும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது. இந்தியாவின் பெருமையையும், கண்ணியத்தையும் பாதுகாப்பது எம்.பி.க்களின் கடமை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. இதைத்தான் பிரதமர் மோடி மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்கப் பார்க்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். பார்லிமென்ட் கூட்டத்தொடர், டிச., 20-ம் தேதி வரை நடக்கிறது. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா உட்பட, 16 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியலமைப்பு தின விழாவையொட்டி இன்று மக்களவை மற்றும் ராஜ்யசபா அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.