சென்னை: இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி செயற்குழுவை கூட்டியது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். கூட்டம் தொடங்கியதும் முதலில், அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கும், அரசியல் கட்சி தலைவர்கள் – முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, மத்திய – மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. மேலும், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடியபோது, அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைவர்கள் இருந்தனர். அந்தக் கூட்டத்தில்தான் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து, கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்தும் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என கோர்ட்டு அறிவித்ததால், கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது.
கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க. பொதுக்குழு 2-வது முறையாக கூடுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இன்றைய கூட்டத்துக்கு வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் வழங்கப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை முறையாக அனைவரையும் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், கட்சி நிர்வாகிகள் அடங்கிய கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சில இடங்களில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
எனவே, அதுபோன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, பா.வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன், டி.ஜெயக்குமார் ஆகியோரும் பேசுவார்கள் என தெரிகிறது.
கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஏற்கனவே, அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.