மத்திய அரசு கடந்த 2021 – 2023 காலகட்டத்தில் நாட்டின் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 1,445 சதுர கி.மீ. அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. உத்தரகண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 2023 ஆம் ஆண்டுக்கான வன நிலை அறிக்கையை மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார்.
1987 முதல், இந்தியாவின் வனப்பகுதியில் ஒவ்வொரு இரு ஆண்டுகளிலும் கணக்கெடுப்பு நடைபெற்று, வன நிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிக்கையில், வனப்பகுதி, மரங்களின் அடர்த்தி, சதுப்புநிலக் காடுகள், கார்பன் இருப்பு, காட்டுத்தீ நிகழ்வுகள், வேளாண் காடுகள் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அறிக்கையின் படி, தற்போது நாட்டில் உள்ள மொத்த வனப்பகுதி மற்றும் மரங்களின் பரப்பளவு 8.27 லட்சம் சதுர கி.மீ. ஆகும், இது நாட்டின் புவியியல் பரப்பளவின் 25.17 சதவீதம் ஆகும். 2021ல் 7.14 லட்சம் சதுர கி.மீ. ஆன வனப்பகுதி, 2023ல் 7.15 லட்சம் சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில், வனப்பகுதி 156 சதுர கி.மீ. மற்றும் மரங்களின் அடர்த்தி 1,289 சதுர கி.மீ. அதிகரித்துள்ளன. மொத்த பரப்பளவில், வனப்பகுதி மிகுந்த மாநிலங்களில் மத்திய பிரதேசம், அருணாசல பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகியவை முன்னணி இடங்களில் உள்ளன. மேலும், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வனப்பரப்பு அதிகரித்துள்ளது.