நெல்லை: நெல்லையில் 5 இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில், இலந்தைகுளம், வேளார்குளம், கோடகநல்லூர், பாரதியார் நகர், திடியூர் ஆகிய 5 இடங்களில் கொட்டப்பட்டிருந்த கேரள மாநில மருத்துவக் கழிவுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு 18 லாரிகளில் காவல் துறை பாதுகாப்புடன் கேரளத்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.
கேரள அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், திருவனந்தபுரம் மாவட்ட உதவி ஆட்சியர் சாக்ஷி தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, கழிவுகள் அகற்றப்பட்ட இடங்களில் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை தெளிக்கப்பட்டன.
இரவாகிவிட்டதாலும், மழைத் தூறல் இருந்ததாலும் பழவூர், கொண்டா நகரம் ஆகிய இரு இடங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் இன்று அகற்றப்பட உள்ளன. மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக, 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.