சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை பதிவேட்டின்படி, வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தெற்கு கேரள கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகாலையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும், ஜனவரி 1-ம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், ஜனவரி 2-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.