புதுடில்லி: திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு, இந்தியாவில் டெல்லி, பீகார், அசாம், மேற்குவங்கத்திலும் உணரப்பட்டது.
திபெத்தில் அதிகாலை வேளையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை குலைநடுங்க வைத்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
திபெத் மற்றும் நேபாளத்தில் இரவில் தூங்கச் சென்றவர்களுக்கு காலை, வழக்கமான விடியலாக அமையவில்லை. என்ன நடக்கிறது என்று பலரும் கண் விழித்துப் பார்ப்பதற்குள் பல்வேறு நகரங்களில் கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்து உருக்குலைந்து கிடந்தன.
அதிகாலை 6.35 மணிக்கு, நேபாள எல்லைக்கு அருகே திபெத் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டது. திபெத்தின் ஜிசாங்க் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
திபெத் – நேபாள எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், அடுத்தடுத்து 6 முறை நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. திபெத்தின் 2-வது பெரிய நகரமான ஷிகாட்சே நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, கட்டடங்கள் குலுங்கின. ஒரு சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.
இதனிடையே, சாலையில் நில அதிர்வு ஏற்பட்டதை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திபெத், நேபாளத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், திபெத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக, டெல்லி, பீகார், அசாம், மேற்கு வங்காளத்தில் அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இதில், பீகாரில் வீட்டில் உள்ள அலங்கார விளங்கு மற்றும் மின் விசிறிகள் ஆட்டம் கண்டதை அறிந்து, அங்கிருந்தவர்கள் அச்சம் கொண்டனர்.