ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது கனடாவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் கொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு இந்தியா தான் காரணம் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கூறி வந்தார். இது தொடர்பாக இந்தியர்கள் நான்கு பேரை அந்நாட்டு போலீசார் கைதும் கூடச் செய்திருந்தனர். இதற்கிடையே அந்த 4 பேரும் இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது கனடாவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு பாதிக்கப்பட முக்கிய காரணமே காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சம்பவம் தான். கடந்த 2023 ஜூன் மாதம் ஹர்தீப் சிங் கனடாவில் வைத்துக் கொல்லப்பட்டார். இதில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதே இரு நாட்டு உறவை மிகக் கடுமையாகப் பாதித்தது. இதற்கிடையே இந்த வழக்கில் இப்போது மேஜர் திருப்பம் அரங்கேறியுள்ளது.
ஹர்தீப் சிங் கொலை வழக்கில் நான்கு இந்தியக் குடிமகன்கள் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர்களுக்குக் கனடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட கரன் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகிய நான்கு பேரும் இப்போது கனடா சிறையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இதன் அடுத்த விசாரணை பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ளது
ஹர்தீப் சிங் கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த மே மாதம் கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நான்கு இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இவர்களுக்கு ஹர்தீப் சிங் கொலையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், வழக்கின் விசாரணைகளின் போது அரசு தரப்பு சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உண்மையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்தச் சூழலில் தான் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி நடந்த விசாரணையின் போது அவர்கள் ஆஜராகியிருந்தனர். அப்போது நீதிமன்ற ஆவணங்களில், நான்கு பேரின் நிலை ‘N’ எனக் குறிக்கப்பட்டு இருந்தது. 4 பேரும் காவலில் “இல்லை” என்பதையே இது குறிக்கிறது. அதாவது நால்வரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் அல்லது நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருப்பதால் விடுவிக்கப்பட்டதாக அர்த்தம்.