பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நன்கொடையாளர்கள் ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கினர்.
கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 876 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியின் தேவைக்காக ஆம்ப்ளிபயர், இரண்டு ஸ்பீக்கர், மைக், ரிமோட் கருவி உள்ளிட்ட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஒலிபெருக்கி சாதனங்களை சென்னை ஆர்.எம்.நேத்ரா எக்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் தொழிலதிபர் ஆர்.முத்துக்கண்டியர், கீரமங்கலம் பி.கே.வி மிளகாய் மண்டி உரிமையாளர் தொழிலதிபர் பி.கே.வி.பன்னீர், பேராவூரணி ஆர்.எம்.நேத்ரா கடலை பருப்பு கொள்முதல் நிலைய மேலாளர் ஆர்.பி. விநாயகமூர்த்தி ஆகியோர் இணைந்து வழங்கினர்.
ஒலி பெருக்கி சாதனங்களை பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர் சு.குமரேசன் பள்ளியின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி கவிதா விநாயகமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கார்த்தி, ஆர்.கே.பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், சசிரேகா மற்றும் மாவடுகுறிச்சி எஸ்.கோபு, கிராமப் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.