புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25, 1950 அன்று நிறுவப்பட்டது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாளை வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த லோக்சபா தேர்தலின் போது நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 96.88 கோடியாக இருந்தது. இது தற்போது 99.1 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், 21.7 கோடி பேர் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். வாக்காளர்களிடையே பாலின விகிதம் கடந்த ஆண்டு 948 ஆக இருந்தது. இது தற்போது 954 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
டெல்லி சட்டசபை தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கடந்த 7-ம் தேதி வெளியிட்டார். அப்போது, நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விரைவில் 100 கோடியைத் தாண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.