புதுடில்லி: இந்தியா கடும் எதிர்ப்பு… இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர், பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அரிசியால் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு எதிராக டெல்லியில் உள்ள இலங்கை தூதரக ஆணையருக்கு சம்மன் அனுப்பி இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு கைது செய்த 13 மீனவர்களில், இருவர் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகர் இன்று காலை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.