தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர் மலர் குழலி, தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா மற்றும் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அபபோது தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலையில் சந்தேகப்படும்படி சென்ற சரக்கு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் 60 கிலோ மூட்டைகளில் இருந்த 2810 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த பாபநாசம் இரும்புத்தலை ஜோதி பிரகாஷ், தஞ்சாவூர் கீழவாசல் மணிகண்டன் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.