திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கவசம், வைர கிரீடம், பச்சைக்கல், மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உள்ள உற்சவர் முருகனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதிகாலை முதல் தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருத்தணிக்கு வந்து சுப்பிரமணிய சுவாமியை இன்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில், ஏராளமானோர் மலர் காவடி, மயில், பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை ஏந்தி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.