சென்னை: அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க, சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய, 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநில மின் துறை அமைச்சர்களுடன், மத்திய மின் துறை அமைச்சர் ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக் சமீபத்தில் காணொலி காட்சி மூலம் பேசினார். இக்கூட்டத்தில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீரான மின்சாரம் வழங்க 7 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குழு மாநில மின் நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்க்கும். குறிப்பாக, போதுமான நிதி, கடன் மற்றும் பற்றாக்குறையை வழங்குவதில் கவனம் செலுத்தும். மின் துறையில் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்வது மற்றும் சூரிய ஒளி மின்சாரம் அதிக அளவில் உற்பத்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாநிலங்களும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு மாறுமாறு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது ரூ. 1.6 லட்சம் கோடி கடன் உள்ளது. இதற்கு வட்டியாக ஆண்டுக்கு ரூ. 17 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை எடுத்துரைத்தார். ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம் வருவாய் அதிகரிப்பதை அவர் எடுத்துரைத்தார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.